Friday, December 28, 2012

எதற்கும் ஓர் எல்லை


எதற்கும் ஓர் எல்லையுண்டு என்பவன் மிக குறுகிய வட்டத்தினுள் வாழ்கிறான்

என்ன வாழ்க்கைடா இது


வாழும் வரை வாழ்க்கை!!! வாழ்க்கை முடியும் முன் வழுக்கை # என்ன வாழ்க்கைடா இது

வெட்டிபய

எதை செய்தாலும் அதில் குறையை மட்டும் காணும் உலகத்தில் எதையுமே செய்யாமலிருக்கிறேன் அதையும் குறை கூறுகின்றனர் # வெட்டிபய

அவ்தானிப்

பெரும்பாலான டாக்டர்களின் கையொப்பம் ECG-யில் வரும் ஏற்ற இறக்கமான கோடுகளை ஒத்திருக்கிறது # அவ்தானிப்

ஓவியமாய்


அழித்துவிட்டு வரையும் ஓவியமாய் காதலிருந்திருந்தால் தேவதாசையோ,ஷாஜகானையோ உலகம் கண்டிருக்காது

ட்விட்டரில்

எண்ணத்தில் எழுவதை எழுதிக் கொண்டிருந்த பலர் எழுத்துக்களை "எண்ணி எண்ணி " எழுதிக் கொண்டிருக்கின்றனர் # ட்விட்டரில்

Saturday, December 15, 2012

சும்மா ஒரு கணிப்பு


தந்தையின் அறிவுரைகளை பின்பற்றாதவர்களே தன் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவார்கள்

தாய்தந்தை


அடித்துவிட்டு பின் ஆறுதல் சொல்லி அன்பு காட்டுபவள் தாய் அடித்துவிட்டு பின் அன்பு காட்டி அறிவுரை சொல்பவர் தந்தை

படித்ததில் பிடித்தது


பிரபாகரன் இருக்கிறாரா?இல்லையா என கேட்பவர்களுக்கு என் பதில்..இருந்தால் அவர் எம் தலைவன் ,இல்லையென்றால் அவர் எம் இறைவன்

"உர்ர்ர்ர்ர்"


அவள் உறங்குவதை ஓவியமாய் தீட்டிவைத்தேன்.. அதிலிருந்தும் "உர்ர்ர்ர்ர்"-குறட்டை சத்தம்

நம்பிக்கை

நல்லவன் எனப்படுபவன் யாரெனில் செய்யும் தவறுகளை பிறரியாமல் செய்ய தெரிந்தவனாவான் # அவனுங்கள தான் நம்புவாங்க

நட்பு !!!!!!!!!!!!!!!!

சரக்கு வாங்கி தந்தது நண்பனா இருந்தா வாந்தி எடுத்தா கூட சொல்லகூடாது அதாண்டா நட்பு

Tuesday, November 27, 2012

அவளை நினைத்து ஆயிரம் கவிதைகள் சொல்ல முடியும் என்னால்!! "பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது"என்பதால் சொல்லாமல் இருக்கிறேன்

Sunday, November 25, 2012

புரிதல்


என்றாவது என்னை புரிந்துகொள்வாள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன் அவளை புரிந்துகொள்ளாமல் நான்

கடவுளின் வேண்டுதல்


அது வேண்டும் இது வேண்டும் என கடவுளிடம் பக்தர்கள் வேண்டுகிறார்கள்: எதுவும் கேக்காத பக்தர்கள் வேண்டுமென கடவுள் வேண்டுகிறார்

Friday, June 1, 2012

நினைவுகளுக்குள்


எப்பொழுதும் சுதந்திர விரும்பியான நான்
என்றுமே சிறைபட்டு கிடக்க விரும்புகிறேன்
உன் நினைவுகளுக்குள்

அவளுக்காக


அத்தனை வலிகளையும் கடந்து வந்தேன் அவளுக்காக
அவள் என்னை கடந்து சென்றாள் கலெக்டர் மாப்பிள்ளைக்காக
-பின்ன வெட்டிபையலை யாருங்க காதலிக்கிறா-

Thursday, May 31, 2012

-வயசுக் கோளாறு-


பார்க்கும் அத்தனை பிகரும் அழகாக தெரிகிறதா? அப்படிஎன்றால் நிச்சயம் உனக்கும் இந்த வியாதி வந்துவிட்டதென்று அர்த்தம் -வயசுக் கோளாறு-

விடுதலை


எப்பொழுதும் தயாராகவே இருக்கிறது எனக்குள் உனக்கான கவிதைகள்
ஒரு முறை சொல்லிவிடு என்னை விரும்புகிறேன் என்று
என் கவிதைகளுக்கு விடுதலை அளித்துவிடுகிறேன்

மனைவியான பின்பு

காதலிக்கும் வரை என்னை உறுதியாக நம்பியவள்
எதற்கெடுத்தாலும் சந்தேகம் கொள்கிறாள் மனைவியான பின்பு
-இந்த பொண்ணுங்களே இப்புடித்தான் குத்துங்க எஜமான் குத்துங்க-

-எல்லாம் ஒரு யூகம் தான் -

பெண்களை குறை கூறும் அனைவரும் யாரோ ஒரு பெண்ணால் கழட்டி விடப்பட்டவர்களாக இருக்கலாம் -எல்லாம் ஒரு யூகம் தான் -

உறைப்பதில்லை

காதலிக்காக பெற்றோரையும் துறக்க தயாராகிவிடும் ஆண்களுக்கு ஒரு போதும் உறைப்பதில்லை
தன் பெற்றோர்கள் தான் முக்கியமென்று கழட்டிவிடும் பெண்களை பார்த்த பின்பும்

Thursday, May 24, 2012

வார்த்தையிலும் ஓவியம்


வார்த்தையிலும் ஓவியம் வரையும் முறையை கற்றுக் கொண்டேன் அவள் பெயர் எழுதிய பின்பு # எங்க வைரமுத்துவ மிஞ்சிருவனொன்னு பயமாருக்கு

தொடர்கிறது என் காதல்


முடிவிலியாய் உன்மேல் தொடங்கிய என் காதலுக்கு நீ முற்றுப் புள்ளி வைத்த பின்னும் தொடர்கிறது -வேறு ஒரு பெண்ணுடன் என் காதல்

கடவுள் இருக்கிறார்

இருக்கும் ஒன்றை இல்லாதது போல் காட்டுவது எளிது இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுவது கடினம்.. ஆனாலும் காட்டுகிறார்கள் கடவுள் இருக்கிறார் என்று

-காதலில் மட்டும்-


ஆம் என்று சொல்ல ஆயிரம் முறை யோசிக்கும் பெண்கள் இல்லை வேண்டாம் என்பதை சொல்ல ஒரு நிமிடம் கூட யோசிப்பதில்லை

சரி

எவரும் எதிர்த்து கேள்வி கேட்கவில்லை என்பதற்காக நாம் செய்வதனைத்தும் சரி என்று பொருளாகாது

தவறில்லை

நம் தவறுகள் பிறருக்கு தெரிந்துவிடாதவரை தவறில்லை என்று நினைத்து கொள்கிறோம்

கவிதை


ஏதோ ஒன்றை எழுதினேன் கவிதை என்றாள் "காதல்" என்று எழுதினேன் கன்னத்தில் அறைந்து சென்றாள் #பொண்ணுங்க மனச புரிஞ்சிக்கவே முடியலையே

சந்தேகம்


இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ் பழமொழி# இல்லாதவன் எதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வது என்பதே என் சந்தேகம்

அனுபவமில்லை

வெளியில் பொறுமை காப்பவன் வீட்டில் எறிந்து விழுகிறான் வீட்டில் பொறுமை காட்டுபவன் வெளியில் எறிந்து விழுகிறான்

பெரிய தண்டனை

திருந்திய கொலையாளியை கண்டு பயந்து ஒதுங்குவதை விட பெரிய தண்டனை இருக்கமுடியாது # சும்மா எதையாச்சும் எழுதி வைப்போம் பின்னால யூஸ் ஆவும்

விளிம்பில்

பொய்யின் விளிம்பில் தான் எப்பொழுதும் உண்மையின் உயிர் உசாலாடும் ஆனால் ஒரு போதும் இறப்பதில்லை # ஹ்ம்ம்

உனக்கு தெரியலை

தான் அறிந்து கொண்ட விஷயத்தை பிறருக்கு கூறுகையில் "எனக்கு தெரிஞ்சிருக்கு உனக்கு தெரியலை "என்ற தொனியிலேயே பலரும் எடுத்துரைக்கின்றனர்.

அவசியம்

அவசரம் கருதி உழைப்பதை விட அவசியம் கருதி உழைப்பது தான் வெற்றியை கொடுக்கும்

உனக்கானதல்ல

பலமுறை முயன்றும் உனக்கு அது கிடைக்கவில்லையா?கவலை வேண்டாம் அது உனக்கானதல்ல

பொன்னிற மேனி


தங்கமும் வெட்கி தலை குனிந்தது
என்னவள் பொன்னிற மேனியை கண்ட பொழுது
-கொஞ்சம் ஓவராத்தான் எழுதிட்டமோ-

-இப்ச்-


அவள் தந்த புன்னகைக்கு பரிசாக
இந்த பொன்னகையை அணிவித்தேன்
அதற்கும் ஒரு பரிசு கிடைத்தது -இப்ச்-

தங்கத்தாமரை


தங்கத்தாமரை பற்றி கேள்விபட்டிருக்கிறேன்
இன்று தான் காணமுடிந்தது
அவள் கைகளில் தங்க வளையல்கள்
-இப்டியே புகழ்ந்து புகழ்ந்து எழுதி தான் நாசமா போய்ட்டோம்-

விலைமதிப்பற்றது

தங்கத்தை விலை உயர்ந்ததாக எண்ணி
உனக்கு பரிசளித்த பின்பு தான் தெரிந்தது
அதற்காய் நீ எனக்கு தந்த முத்தம்
அதனை விட விலைமதிப்பற்றது என்று
-சரோ-

Tuesday, May 22, 2012

உன் நினைவுகள்

அணு ஆயுதங்களை விட மோசமானவை உன் நினைவுகள்
என்னுள் ஏற்படுத்திவிட்டன ஆறாத ரணத்தை

ஒப்படைக்கவில்லை

எழுதிய கவிதைகள் அனைத்தும் என்மேல் கோவமாய் இருக்கிறது
உன்னிடம் அவற்றை ஒப்படைக்கவில்லை என்று

எப்பொழுதும் போதையில்

எப்பொழுதும் போதையில் இருப்பதே உன் நினைவுகளில் இருந்து தப்பித்து கொள்வதற்காகத்தான் அன்பே

நம்பிக்கையினிலேயே

அவளுக்கு என்னை பிடிக்கவில்லை என்று இன்றே தெரிந்திட கூடும்
என்ற பயத்தினில் தான் சொல்லவில்லை
இன்னும் நீடிக்கட்டும் அந்த நம்பிக்கையினிலேயே என் காதல்

மறைந்துவிட்டாள்


நிலவுடன் ஒப்பிட்டேன் அவளை
அமாவாசையுடன் ஓடி மறைந்துவிட்டாள்
(பக்கத்துக்கு வீட்டுக்காரன் )

மாமியார் வீட்டில்

என் காதலியை தேடி திரிந்து அவளை கண்கொண்டேன்
அவள் மாமியார் வீட்டில் -சீ அது கல்யாணம் ஆன ஆண்டி-

என் உணர்வுகள்

சரக்கடிக்காமல் எழுதும் கவிதைகள் அவளை வர்ணிப்பது போல்
சரக்கடித்து வரும் கவிதைகள் அனைத்தும் அவளை திட்டுகின்றன
சரக்குக்கு புரிந்த அளவு கூட அவளுக்கு புரியவில்லை என் உணர்வுகள்

என்னவள்

ஒவ்வொரு நாளும்அவளை நினைக்கும் பொழுதினை விளக்கவே என் கவிதைகள்
ஒருநாளும் அதன் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவேயில்லை என்னவள்

நிறைந்து கிடக்கின்றன


நிலவை தொட்டு எழுதிய கவிதைகள் -மறைந்து போயின-
மலரை தொட்டு எழுதிய கவிதைகள் -உதிர்ந்து போயின-
வெளிச்சம் தொட்டு எழுதிய கவிதைகள்- இருண்டு போயின-
நினைவை தொட்டு எழுதிய கவிதைகள் மட்டும் நெஞ்சத்தில் நிறைந்து கிடக்கின்றன.
நிஜத்தில் நீ என்னை வந்தடைவாய் என்ற நம்பிக்கையில்!!!
- சரோ-

ஓரவிழி பார்வையில்


இரவுக்குள் மறைந்திருந்த என் கவிதைகள் யாவும்
விழித்துக் கொண்டன அவள் ஓரவிழி பார்வையில்

ஹ்ஹ்ம் ஹ்ம்ம் ஆம்

மனதை திருடியதாய் வழக்கு தொடர்ந்தேன்
தண்டனை கிடைத்ததென்னவோ எனக்கு தான்
அவளும் ஹ்ஹ்ம் ஹ்ம்ம் ஆம் (அவளும் லவ்ஸ் பன்றேன்ட்டாப்பா)

உறுதியாகிவிட்டது


நான் எழுதுவது அனைத்தும் கவிதை என்று நினைத்துக் கொண்டிருந்தேன்
அவளை பார்ப்பதற்கு முன்பு வரை
இப்பொழுது உறுதியாகிவிட்டது நான் எழுதுவது மட்டுமே கவிதை என்று!!!
அது அட்டு பிகர் மச்சி

ஊதிட்டா மச்சான் அவ



குத்து பாட்டை போல குதூகலமாக எழுதிகொண்டிருந்தேன்
அவளை பற்றிய கவிதைகளை
எல்லாவற்றிற்கும் ஒரே டியுனை போட்டுவிட்டாள்
-சங்கு சத்தம்-

அளவுக்கு அதிகமாய்

அனுதினமும் உன்னை பற்றி எழுதிய கவிதைகளை
என் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது
அளவுக்கு அதிகமாய்
அட்டு பிகரை பற்றி எழுதிவிட்டேன் என்று!!!

நானும் விரும்பினேன்

நானும் விரும்பினேன் அவளும் விரும்பினால்
நான் அவளை அவள் அவனை -என்ன பொழப்புடா சரோ இது-

என்னை மட்டுமே கேட்டவள்

எது வேண்டுமானாலும் கேள் என்ற போது என்னை மட்டுமே கேட்டவள்
இன்று "எண்ணெய்" கேட்கிறாள்...வீட்டுக்கு போகும் போது வாங்கிட்டு போவனும்

Saturday, April 28, 2012

சேதுராமனின் புலம்பல்கள்

சேது ராமன் ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்.ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகளாகின்றன.ஆனாலும் அவரது பணிகள் இன்றும் தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது வீட்டில் ஓய்வின்றி.தினசரி காலையில் பால் வாங்கி வருவது,காய்கறி வாங்கி வருவது என எல்லா வேலைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டேயிருப்பார் சேதுராமன்..அவருக்கு குழந்தைகள் கிடையாது..அவரது மனைவி மீனாட்சி அவரது மாமன் மகள் விரும்பி திருமணம் செய்து கொண்டார்.ரத்த உறவுகளில் செய்த திருமணத்தினால் தான் குழந்தை பேரு வாய்க்கவில்லை என மருத்துவர்கள் கை விரித்துவிட்டனர்.ஆனாலும் அதை நினைத்து இருவரும் கவலைப்பட்டதில்லை..மிகவும் சந்தோசமாக இன்று வரை வாழ்ந்து வருகின்றனர்.சேது ராமன் எப்போதும் ஓய்வின்றி ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டேயிருப்பதில் மீனாட்சிக்கு மிகவும் பெருமை.இந்த வயதிலும் தன் வீட்டுக்காரரின் சுறுசுறுப்பை பற்றி பக்கத்துக்கு வீட்டு கோமதியிடம் பெருமை பேசாத நாளே கிடையாது..சேது ராமன் துப்புரவு பணியாளராக இருந்ததாலோ என்னவோ அவருக்கு எங்கேயும் எப்போதும் சுத்தமாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஆழப் பதிந்து விட்ட ஒன்றாகிவிட்டது.அவர் இப்பொழுதெல்லாம் அதிகம் கவலைப் படுவது நாட்டைப் பற்றியும் நாட்டு மக்களைப் பற்றியும் தான்..இந்த வயாதான காலத்தில் அவரால் கவலைப்பட மட்டும் தானே செய்ய முடியும் அதனால் அவர் அதை ஒழுங்காகவே செய்கிறார்..தினசரி தன் வேலை பொழுதுகளின் முடிவில் அருகிலிருக்கும் பூங்காவிற்கு தன் நண்பர் ரங்கசாமியுடன் சென்று உரையாடுவதை வழக்கமாகவே வைத்திருந்தார் சேது..இன்றும் அது போல் பூங்காவிற்கு நடையை தொடங்கினார் சேதுராமன்.
அங்கே தன் நண்பர் ரங்கசாமி கல்நார்காலியில் அமர்ந்து குழந்தைகள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தபடியே அவரருகில் சென்று என்ன? ரங்கு இப்டி விளையாடனும்னு ஆசையா இருக்குதா? வாயேன் விளையாடலாம் என்று அழைத்தார் சின்ன சிரிப்புடன்..ரங்குவோ உன் வயசுக்கு நீ விளையாடலாம் என்னைமாதிரி வயசானவங்க இப்ப விளையாட முடியுமாப்பா என நையாண்டியாக பதில் கூறினார்..அது சரி தான் என்றவாறு அவரருகில் அமர்ந்தார் சேது ராமன்..
என்ன சேது இன்னைக்கு என்ன விசேசம் ஏதும் செய்தி வச்சிருக்கியா? தினம் உங்கிட்ட இருந்து செய்தி எதாச்சும் கேக்கலைனா பொழுது போகமாட்டிக்குதுப்பா என்றார் ரங்கு.
அதான எப்போதும் என் பொலம்பல கேக்குறதுக்கு நீ ஒருத்தன் இருக்கியே அது போதும்..இன்னைக்கு காலைல பேப்பர பாத்ததிலருந்தே மனசுக்கு கொஞ்சம் சரி இல்லை ரங்கு..
ஏன் அப்படி என்ன போட்டிருக்கு?பேப்பர்ல, எதாச்சு கொலை,கொள்ளை,விபத்து பத்தி படிச்சியா?
தினம்தான் அது பத்தி செய்தி வருதே..இதை விட தினம் வர விளம்பரங்களை பாத்தா தான் நெஞ்சு பொறுக்கமாட்டிகுது ரங்கு என்றார்.
ஒ அது சரி அப்படி என்ன?செய்தி இன்னைக்கு?
நானும் இப்ப கொஞ்ச காலமா கவனிச்சிக்கிட்டு தான் வரேன் மக்களுக்கு விளம்பரத்து மேல மோகம் அதிகமாயிடுச்சி.எதுக்கெடுத்தாலும் விளம்பரம் விளம்பரம்னு விளம்பர பிரியர்களாகவே மாறிட்டாங்க மக்கள்..இன்னைக்கு காலைல பேப்பர்ல எதிர்கால இளஞ்சூரியனே வாழ்கநு ஒரு தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கு விளம்பரம் போட்டிருக்காங்க..
எப்பா இது ஒரு குத்தமா?
அது இல்லைப்பா இது தலைவருக்காக அவரது பிறந்தநாளுக்காக கொடுக்கப்பட்ட விளம்பரமா தெரியலை..அவரது தொண்டர்கள் அவர்களுக்காகவே கொடுத்துகிட்ட விளம்பரம் மாதிரி தான் தோணுது.ஒரே ஆளுக்கு அஞ்சு அஞ்சு பேரு தனி தனியா அவங்களோட படம் போட்டு தலைவர் படம் போட்டு வாழ்க வாழ்க அஞ்சு பக்கத்துக்கு விளம்பரம் போட்டிருக்காங்க..இதுவாச்சும் பரவாயில்லை மகிழ்ச்சியான செய்தின்னு விட்டுரலாம் கண்ணிற் அஞ்சலியை கூட இப்டி விளம்பரமா பயன்படுத்துராங்கப்பா அதான் எரிச்சலா வருது..சரின்னு கடுப்புல பேப்பர மடிச்சி வச்சிட்டு காய்கறி வாங்க மார்க்கெட்டு பக்கமா நடந்து போறேன் அங்கயும் இதே கொடுமை பத்தடி தூரத்துக்கு ஒண்ணுனு ஒவ்வொரு குறிப்பிட்ட இடைவெளியிளையும் ஒரு பிளேக்ஸ் போர்டு வச்சிருக்கானுங்க எதிர்கால தமிழகமே வருக வருகன்னு..எத்தனை போஸ்டர் எத்தனை பிளேக்ஸ் போர்டுங்ர..
ஏன்பா சேது பெரிய தலைவர்கள்னா அப்படித்தான்பா வைப்பாங்க
அட நீ ஒன்னு நம்ம பெரியசாமி?அவர் போன தடவை அமைச்சரா இருந்தாரு இந்த தடவை தோத்துல போனாரு?அவரு வரதுக்குதான் இந்த விளம்பர போர்டுகல்லாம் வச்சிருகானுங்க..முன்னாள் அமைச்சருக்கெல்லாமா இப்டி பண்ணனும்?தேவை இல்லாம எதுக்கு இம்புட்டு காச வீணாக்குறாங்க தான் புரியலை..
ம்ம் அதுவும் சரிதான் என்பது போல் தலையசைத்தார் ரங்கு
ரெண்டுநாளைக்கு முன்னாடி நம்ம மார்க்கெட் வீதியிலே தார்சாலை போட்டாங்கல்ல?இப்ப போய் பாரு அதோட நிலைமையை,இந்தாளு வராருன்னு பிளெக்ஸ் போர்டு வைக்கிறதுக்குன்னு இரண்டு பக்கமும் இருபது குழிதோண்டி ரோட்ட பழைய படி பள்ளமும் மேடுமுமா மாத்திட்டானுங்க.இதுக்குல்லாம் அனுமதி கொடுக்கிற காவல்துறைக்கும்,அரசாங்கத்துக்கும் என்னைக்குதான் அறிவு வருமோ தெரியலை என்று கருத்துக் கொட்டினார் சேதுராமன்..
இப்ப மக்கள்கிட்ட இந்த கலாச்சாரம் ஒரு கட்டாய சம்பிரதாயம் போல தொத்திக்கிச்சினு நினைக்கிறேன்..காத்து குத்துலருந்து எந்த விழாவானாலும் சரி எளவு செய்தியானாலும் சரி பிளெக்ஸ் இல்லாம இருக்குறது இல்லை..இப்டி பிளெக்ஸ்ல கிடைக்கிற ஒரு நாள் விளம்பரத்துக்காக பலரும் காசை வீனாக்குராங்கபா..இருக்குறவங்க வீணாக்குனாலும் பரவாயில்லை இல்லாதவங்களுக்கும் இந்த மோகம் ஆட்டி படைக்குதுனா கவலைபடாம இருக்கமுடியுமா?அவங்களுக்கே தெரியலை இதுனாலே ஒரு பயனுமில்லை தண்ட செலவுதாணு..அதை நினைச்சி தான் மனசுக்கு கஷ்டமாவும் எரிச்சலாவும் இருக்குது என்று கூறி முடித்தார் சேதுராமன்.இதுக்கு செலவளிக்கிற காசை திருமண நிகழ்ச்சியா இருந்தா மணமக்களுக்கும் பொது நிகழ்ச்சியா இருந்தா நலிந்தோருக்கோ,ஆதரவற்றோருக்கோ,முதியோர் இல்லத்திற்கான உதவி தொகையாவோ கொடுக்கலாம்..நம்மால் பிறருக்கு செய்யப்படவேண்டிய உதவிகள் ஆயிரம் இருக்கு..அதை செய்ய யாரும் முன் வரதில்லை இது போன்ற பொழுது போக்கு ஆடம்பர செலவுகளுக்குன்னா மட்டும் பலரும் பங்கெடுத்துகிட்டு காசை வீணாக்குறாங்க ரங்கு என்றார் மிகவும் சோகத்துடன்..
"என்னங்க பால் வாங்க போக நேரமாச்சு வரிங்களா ?என்ற குரல் வந்த திசை நோக்கி திரும்பினார் வாசலில் மீனாட்சி..
இதோ வந்துட்டேன் என்றபடியே எழுந்து ரங்குவிடம் விடைபெற்று நகர்ந்தார்..
(தொடரும் புலம்பல்)

அமைச்சர் வந்தாரு

பட்டித் தொட்டி எங்கும் கேட்கும் விதமாக பெரிய ஒலிப்பான்களை தலையில் சுமந்தவாறு இரண்டு மூன்று வாகனங்கள் வீதிகளை அலற வைத்தபடி சுற்றி திரிந்து கொண்டிருந்தது..இன்று மாலை ஐந்து மணியளவில் பூக்கடை வீதி நால்வழி சந்திப்பில் உங்களை நேரில் சந்தித்து வாக்குகள் சேகரிக்க எங்கள் பாசத்திற்குரிய அண்ணன் மாண்புமிகு அமைச்சர் அம்பலவாணன் அவர்கள் வருகின்றார்" என்ற அறிவிப்பை ஓயாது ஒப்புவித்துக் கொண்டிருந்தது ஒலிப்பான்கள்.அமைச்சரின் வருகைக்காக நேற்றே சீர் செய்யப்பட்ட வீதி விளக்குகள் பிரகாசமாக சிரிக்க தொடங்கியிருந்தன வீதிகளில்.நேற்று வரை குப்பையும் மேடு பள்ளமுமாக காட்சியளித்த சாலை பகுதி இன்று பளிச்சிடும் அலங்கார விளக்குகலோடும் தோரணங்களோடும் அழகாய் காட்சியளிக்கிறது.மேடு பள்ளங்கள் சீர் செய்யப்பட்டுவிட்டிருந்தது சாலையோர பகுதியில் பிளிச்சிங் பவுடரால் ஓரமிடப்பட்டிருந்தன..ஆங்காங்கே ஒலிப்பெருக்கிகள் மக்கள் நலனை கருத்தாய்க் கொண்ட பாடல்களை ஒலித்துக் கொண்டிருந்தது.நால் வழிசந்திப்பு பகுதியில் வாகனங்கள் செல்ல தடை மாற்றுப்பாதையில் செல்லுமாறு அறிவுத்தப் பட்டிருக்கும் அறிவுப்பு பலகைகள் வைக்கப்பட்டுவிட்டன.காலையிலிருந்து அங்குமிங்கும் பரபரப்பாக முன்னேற்பாடு வேலைகளை மும்மரமாய் செய்து கொண்டிருந்தனர் கட்சித் தொண்டர்கள்.நால்வழி சந்திப்பில் மிகப்பெரியதொரு மேடையும் அதனிருபுறமும் பெரிய ஒலிப்பான்களும் பொருத்தப்பட்டிருந்தது..மேடை முழுவதிலும் அமைக்கப்பட்ட அலங்கார விளக்குகளும் வண்ண வண்ண தோரணங்களும்கூட அமைச்சரின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்தன..மாற்றுப்பாதையில் செல்ல வாகங்கள் முண்டியடித்துக் கொண்டிருந்தன எங்கு பார்த்தாலும் கூட்ட நெரிசலில் சிக்கி கஷ்டப்பட்டு பாதையை கடந்து செல்கின்றனர்..வழிவிடவேண்டி வாகனங்கள் எழுப்பும் சப்தத்தை விட அதிகளவு சத்தத்துடன் ஒலித்துக் கொண்டிருந்தது கட்சிப் பாடல்கள்..நேரம் நெருங்க நெருங்க தொண்டர்களுக்கு உற்சாகம் மேலோங்கியது காரணம் அமைச்சரை எதிர்ப்பார்த்து அல்ல அங்கு விநியோகம் செய்யப்பட்ட பிரியாணி பொட்டலங்களாலும் மது பாட்டில்களாலும் தான்..மேடைக்கு பின்புறத்தில் விநியோகிக்கப்படுகிறது, இவை இன்று அயராது உழைத்த தொண்டர்களுக்கு அன்பளிப்பாக வழங்கபட்டுவருகிறது இப்பொழுது..இலவசாமாக வழங்கப்படும் இடத்தில் பெரும்கூச்சலும் சண்டையுமாக இருந்தது தனக்கு பின் கட்சியில் இணைந்தவருக்கு மேலும் ஒரு பாட்டில் மது அதிகமாக வழங்கப்பட்டதால் வந்த சண்டை...அதை மூன்றாக குடுத்து முடித்து வைத்தனர் ஒன்றியங்கள்..நேரம் ஐந்து மணியை தாண்டியும் இன்னும் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது "இன்னும் சிலமணித் துளிகளில் உங்களை நேரில் சந்திக்க வந்துகொண்டிருக்கிறார் அருமை அண்ணன் அம்பலவாணன்"என்று.
இதோ அமைச்சர் வந்துவிட்டார் என ஒருவர் ஒலிப்பானில் குரல் எழுப்ப தொடர்வெடி முழக்கத்துடனும்,உள்ளூர் கரககாட்ட தப்பட்ட இசைக்குழுவினரின் ஆட்டம் பாட்டத்துடன் மரியாதை மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டது அமைச்சருக்கு..பின்பு மேடையேறியமர்ந்தவரை ஒருவர் பின் ஒருவர் பாராட்டி பேசி பொன்னாடை ஒன்றை போர்த்தி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்..மேடையை சுற்றிலும் காசு கொடுத்து கூட்டிவரப்பட்ட கூட்டத்துடன் கூட்டமாக மக்களும் திரளாக நின்றிருந்தனர் அமைச்சரின் பேச்சை கேட்க ஆவலுடன்..ஐந்து வருடத்திற்கு ஒரு முறை தான் அவரை பார்க்கமுடியும் என்பதாலோ என்னவோ அவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் அவர் முன்னால் கூடியிருந்தது..கூடியிருந்த மக்கள் கூட்டத்தினை நோக்கி இருகரம் உயர்த்தி கூப்பியவாறு எழுந்து மைக்கின் முன் சென்று நின்றார்..கரவொலியால் மேடை அதிர்ந்தது..அதனை பார்க்கும் பொழுதே தெரிந்திருக்கும் அவருக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாவிட்டாலும் இந்த மக்கள் அடுத்தடுத்து நாம் ஜெயிப்பதற்கு உறுதுணையாய் நிற்பார்கள் என்று..வழக்கம் போல் மைக்கை பிடித்து பேச தொடங்கியதும் அடைமழை போல் மக்களின் கரவொலிகளை பெற்றுக் கொண்டிருக்குமளவுக்கு இருந்தது அவரது பேச்சு..இன்று வீதிகளில் எரியும் விளக்குகளை பாருங்கள் வாகனங்கள் செல்லும் சாலைகளை பாருங்கள் இவை எல்லாம் எங்கள் ஆட்சியில் உங்களுக்கு செய்து கொடுக்கப்பட்டவைகள் என்று இன்றைக்கு சிறப்பாக இருப்பவையெல்லாம் அவர்களால் நடந்தேறியவை போல் பேசிக் கொண்டிருந்தார்..நேற்று சாலை இருந்த நிலைமையையும்,வீதி விளக்குகள் கொடுக்க மறந்த வெளிச்சத்தையும் மறந்து இன்று அவர் கூறும் பொய்களையும் வீண் வாக்குறுதிகளையும் நம்பி கைதட்டி கொண்டிருந்தது அப்பாவி மக்கள் கூட்டம்..அடுத்து இரண்டொரு நாட்களில் சாலையும் விளக்குகளும் "பழைய குருடி கதைவை திறடி" என்ற பழமொழிக்கேற்ப பல்லிளித்துக் கொண்டிருந்தது அமைச்சரையும் அடிபொடிகளையும் தான் காணவில்லை.இனி அவர்களை காண மக்கள் ஐந்து வருடங்களுக்கு காத்திருக்க வேண்டும்

Saturday, April 14, 2012

"நல்லா வைக்கிராங்கய்யா பேரு"


அவசரமாக வீட்டிற்கு ஓடிவந்தான் சீனு.மூச்சிரைக்க ஓடிவந்தவன் சொன்ன செய்தியைக் கேட்டதும் வீடே பரபரப்பானது.சாவித்திரி அந்த பஞ்சாங்கத்த எடுத்துக் குடுமா நல்ல நேரம் பார்த்து தான் பேரு வைக்கணும் என்றார் சீனு தாத்தா..ஆமாம் அவரை எல்லோரும் சீனு தாத்தா என்றழைத்ததால் அவரின் நிஜப் பெயர் என்னவென்று அவருக்கும் மறந்துவிட்டது எனக்கும் தான்..அதெல்லாம் ஒன்னும் வேணாம் இன்னிக்கு கிருத்திகை நட்சத்திரம் இன்னைக்கு பொறந்ததால கிருத்திகானே வச்சுக்குவோம் செல்லமா ஸ்டைலா கிரிஷ்நு கூப்டுக்கலாம் என்றாள் ஐயம்மாள் பாட்டி.ச ச அதெல்லாம் வேணாம் அத்தை நியுமராலஜி படி ஏதாச்சும் நல்ல பேரா வைக்கணும் அப்பத்தான் நல்லாருக்கும் என்றாள் சீனுவின் அம்மா ஆனால் சீனுவோ போங்கம்மா நான் இண்டர்நெட்ல தேடி நிறைய ஸ்டைலான பேரு சொல்லுறேன் அதிலருந்து தான் ஒரு நல்ல பேரா வைக்கணும் என்று அடம்பிடித்தான்.இந்த நேரத்தில் அலுவலக வேலையை முடித்து வீடு திரும்பியிருந்தார் கணேஷன்..சீனு ஓடி வந்து விஷயத்தை கூறியதும் ரொம்ப மகிழ்ச்சியடைந்தார்..உடனே தன்னுடைய கண்டிசனை தன் அப்பாவிடம் கூறினான் சீனு..ஆளாளுக்கு தங்களின் யோசனைகளை கூறினார்கள் அவரிடம் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு கணேசனே முடிவெடுத்துவிட்டார் "நம்ம லக்ஷ்மி போட்ட குட்டின்றதால லக்ஷ்மி குட்டினே வச்சிடலாம்" (அடபாவிகளா ஒரு நாய்குட்டிக்கு பேரு வைக்கிரதுக்காடா இந்த அக்கபோரு பண்றீங்க?நு நீங்க கேக்குறது புரியுது..வீட்டுல ஒரு நபரா நினைச்சி வளத்துட்டாங்க அதான் இப்புடி..லக்ஷ்மியை அனைவரும் லக்ஸ் என்றே அழைப்பது தனிக்கதை)

Friday, April 13, 2012

மினி ஸ்டோரி


நேரம் மதியம் 1 .30 .பேச்சியம்மாள் சாலையோர பாதையில் வேகமாக சென்று கொண்டிருந்தாள்.வாகனங்களின் சப்தமும் புழுதி காற்றின் இரைச்சலும் மக்கள் பரபரப்பாய் இயங்குவதாய் காட்டிக் கொண்டிருந்தது.தன் முகத்தில் வழியும் வியர்வை துளிகளை தன் சேலையின் முந்தானை பகுதியில் துடைத்துக் கொண்டு வேகமாய் நடந்து சென்று கொண்டிருந்தாள்.பேச்சியம்மாள் சாலையோரத்தில் இட்லி கடை வைத்திருப்பவள்.அவள் கணவர் வீரமணி இறந்து ஆறு வருடங்களாகிறது..தன் ஒரே மகன் ராமுவுக்காக இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.ராமு நன்றாக படிக்கும் மாணவன்.பனிரண்டாம் வகுப்பில் பள்ளியிலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றிருந்தான்..தற்பொழுது மேற்படிப்புக்காக சென்னைக்கு சென்று இரண்டு வருடங்களாகிறது..அவள் கணவன் இருந்தவரையில் அவளுக்கு எந்த கஷ்டமும் தெரிந்திருக்கவில்லை..திடிரென மாரடைப்பில் அவர் இறந்த பின்பு வாழவழி தெரியாது திக்கெற்று நின்றவளுக்கு அவரது உறவுக்காரர் மூர்த்தி அண்ணாச்சி தான் இந்த கடை வைக்க உதவினார்..இதில் வரும் சொற்ப வருமானத்தில் தான் தன் மகனின் படிப்புக்கு போக மீதியில் தன் பிழைப்பையும் நடத்தி வருகிறாள்..நாளை தான் தேர்வுக் கட்டணம் செலுத்த இறுதி நாள் என்றும் இரண்டாயிரம் பணத்தை தனது வங்கி கணக்கில் செலுத்துமாறும் அவன் போன வாரம் கடிதம் எழுதியிருந்தான்.இந்த விவரத்தை தபால் காரர் சொன்னதிலிருந்து கஷ்டப்பட்டு தான் சேகரித்து வைத்திருந்த பணம் 1800ஐயும்,மேலும் பக்கத்துக்கு சலூன் கடை தம்பி அருளிடம் 200 ஐயும் கடன் பெற்றுக் கொண்டு இப்பொழுது வங்கியை நோக்கி சென்று கொண்டிருக்கிறாள்..ஒரு வழியாக வங்கியினை வந்தடைந்தாள்..
முன் வரிசையில் மூன்று அலுவலர்கள் அமர்ந்து கணினியில் பணி செய்து கொண்டிருந்தனர்.அவர்களுக்கு பின்னால் ஒரு தனி அறையில் வங்கியின் மேலதிகாரி இருந்தார்..மின் விசிறிகள் சுழல கணினியின் முன்பு அவர்கள் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்ததும் தன் மகனும் படிப்பை முடித்து இது போன்ற ஒரு வேலையை தான் செய்வான் என்று கற்பனை செய்து பார்த்துக் கொண்டாள்.தன்னிலைக்கு வந்தவாறு அலுவரில் ஒருவரின் அருகில் சென்று " ஐயா இந்த சீட்டுல எழுதிருக்க நம்பெருக்கு இந்த பணத்த போடணும். என்று தன் மகன் எழுதி கொடுத்திருந்த வங்கி கணக்கு எண் எழுதிருந்த சீட்டை நீட்டினாள்"..அதனை வாங்கி பார்த்த அவர் "அம்மா இப்டி கொண்டுவந்து குடுத்தாளாம் போடமுடியாது அந்த தண்ணி கேன் இருக்கு பாத்திங்களா?அங்க மூணு கலர்ல சீட்டு இருக்கும் அங்க போய் ஒரு சிவப்பு கலர் சீட்டு எடுத்துகிட்டு அதுல எந்த ஊருக்கு, எவ்ளோ பணம்,யாரு பேருல போடணும்னு எல்லா விவரமா எழுதி கொண்டு வாங்க அப்பத்தான் போடமுடியும் என்று கூறி தண்ணி கேன் இருக்கும் இடத்தை நோக்கி கை காண்பித்தார்..
ஐய்யா எனக்கு எழுத படிக்க தெரியாதுங்க கொஞ்சம் நீங்களே எழுதி இந்த பணத்த வாங்கி போட்டிருங்களேன் என் பையன் பரீட்சைக்கு நாளைக்கு பணம் கட்டனும்ங்க என தாழ்ந்த குரலில் கூறினாள். இப்டி வரவங்க எல்லாருக்கும் நான் எழுதிகிட்டிருந்தா என் வேலையை யாரும்மா பாக்குறது?எழுத படிக்க தெரியாதுனா ஏன் இங்க வரிங்க?தபால் ஆபிஸ்ல கொண்டு மணியார்டர் பண்ணனும் நு குடுக்க வேண்டியதானே என கொஞ்சம் கடுமையாக குரலில் பதில் சொன்னார்..இல்லைங்க மனியார்டேருக்கு நூத்துக்கு அஞ்சு ரூபா பிடிச்சிக்குவாங்கலாம் இந்த பணத்துக்கே பத்தலைன்னு இரநூறு கடன் வாங்கியாந்திருக்கேன் கொஞ்சம் எழுதி கொடுங்க சார் என கெஞ்சும் குரலில் கேட்டாள். எத்தனை தடவை தான்ம்மா சொல்றது? எனக்கு நிறைய வேலை இருக்குது..இன்னிக்கு வேற சனிக்கிழமை ரெண்டு மணிக்கெல்லாம் கணக்கு முடிக்கணும் இன்னும் அஞ்சு நிமிஷம் தான் இருப்பேன் இங்கயே நின்னுகிட்டிருக்கமா யார்கிட்டயாச்சும் குடுத்து எழுதிட்டு வாங்க இல்லைனா இனி திங்கள் கிழமை தான் பணம் போடமுடியும் என்று எரிச்சலோடு சொல்லி அனுப்பினார்.பெரிய பெரிய இடங்களில் பணிபுரிபவர்களுக்கு மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை இருக்காது போல என தன் நிலையை எண்ணி நொந்துகொண்டாள்..
இனியும் இங்க நின்னு நேரத்த வீனடிக்கவேணாம் வெளில யார்கிட்டயாச்சும் உதவி கேக்கலாமென்று எண்ணி வேகமாய் வெளியில் ஓடினாள்.
அங்கு சாலையில் நான்கு பள்ளி மாணவர்கள் கையில் மட்டை, பந்துகளுடன்,பேசியபடி வந்து கொண்டிருந்தனர்.பேச்சியம்மாள் அவர்களை நிறுத்தி அவர்களிடம் விவரத்தை கூறி வங்கியில் எடுத்த சிவப்பு நிற சீட்டையும் தன் மகன் கொடுத்த வங்கி கணக்கு என் சீட்டையும் கொடுத்தாள்.அவர்களில் ஒருவன் அந்த படிவத்தை பூர்த்தி செய்துவிட்டு "அம்மா இந்த இடத்துல உங்க கையெழுத்து இல்லைனா கைரேகைய உருட்டி கொண்டு போய் குடுங்க வாங்கிக்குவாங்க" என்று கூறிவிட்டு சென்றனர்.அவர்களுக்கு நன்றி கூறி விட்டு அவசரம் அவசரமாய் தன் ரேகையை அதில் பதித்து விட்டு உள்ளே வேகமாய் ஓடினாள்
"COUNTER CLOSED" நேரம் மதியம் 2 .00 மணி..

சித்திரை திருநாள்.


இன்று பிற்பகலில் எனது அலுவலகத்தில் மின் விசிறி சுழன்று இதமான காற்றை என்மேல் பரப்பிக் கொண்டிருந்த நேரம் சப்தம் கேட்டு வெளியில் சென்று நான் கண்ட காட்சியைப் பற்றி எழுத தொடங்கினேன்
ம்ம் இந்த நாளை இங்கு தெய்வ வழிபாட்டிற்கு உகந்தநாளாக வெகு விமரிசையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.தமிழ் புத்தாண்டு சித்திரை ஒண்ணா?அல்லது தை ஒண்ணா? என்ற குழப்பமெல்லாம் இவர்களுக்கு இல்லவே இல்லை என்பது அவர்களது கொண்டாட்டதிலிருந்தே தெரிந்தது.இது போன்ற விசேச நாட்களில் மனிதன் கடவுளை நினைக்க தவறுவதில்லை.கடவுள் இருக்கிறாரா?இல்லையா என்ற சிந்தனைகளுக்குள் இவர்கள் செல்வதில்லை. ஐந்து பேர் மேளம் அடிக்க இருபது பேரு அதனை பின்தொடர்ந்தவாறு ஆளுக்கொரு குடம் தண்ணீரை தலையில் சுமந்தபடி செல்கின்றனர்.மேளத்தின் இசை எவ்வாறாக இருப்பினும் தங்களுக்கு தெரிந்த சில நடன அசைவுகளை மட்டுமே திரும்ப திரும்ப ஆடியவாறு சிறுவர் கூட்டம் ஒரு புறமும்,இறைவனே தனக்குள் இறங்கியதாய் நினைத்துக்(?) கொண்டு அதை மற்றவருக்கும் காட்டும் விதமாய் ஆடிய படியே சில பெரியவர்களும் முன்னேறி சென்று கொண்டிருந்தனர்.இவர்கள் எதன் பொருட்டு இவ்வாறு செய்கின்றனர்?.இதில் ஈடுபடும் ஒவ்வொருவருக்கும் ஒரு தேவை இருக்கிறது.அதன் பொருட்டுதான் இவை நிகழ்கின்றன.இதுமட்டுமல்ல ஒவ்வொருவரின் தேவைக்கேற்ப அவர்களின் வேண்டுதல் வேறுவிதமாகவும் நிறைவேற்றப்படுகின்றது.இவர்கள் செய்யும் இந்த வேண்டுதல்களையும் பிரார்த்தனைகளையும் இறைவன் ஏற்றுக் (கொள்கிறாரா?)கொண்டாரா? என்பதையும்கூட இவர்களில் ஒருவரே தீர்மானித்துக் கொள்வார்.என்ன ஆச்சரியம் பாருங்கள் கடவுளை நேரில் கண்டிராத மனிதனுக்கு கடவுளுக்கு பிடித்த உணவு,உடை,இசை,அபிசேகங்கள்,என அத்தனையும் தெரிந்திருக்கிறது..முற்றும் அறிந்தவராகிய(?) கடவுளுக்குதான் தன் பக்தர்களுக்கு என்ன தேவை என்பது தெரியவில்லை..கடவுளுக்கான அனைத்து தேவைகளையும் அறிந்து வழிபட்டு வரும் பக்தர்களுக்கு கடவுள் செய்யும் கைம்மாறு என்னவோ கற்சிலையாய் நிற்பதை தவிர வேறொன்றுமில்லை.
தங்களை வருத்திக் கொண்டு இவர்கள் செய்யும் வேண்டுதல்கள்,பிரார்த்தனைகள்,அபிசேகங்கள்,அலங்காரங்கள்,பிரசாதங்கள், போன்றவற்றை எந்த கடவுளும் கேட்டதுமில்லை,ஏற்றதுமில்லை என்பதை என்று தான் உணர்வார்களோ தெரியவில்லை..ஆயினும் தொடரட்டும் இந்த கலாச்சார நிகழ்சிகள்..நமது பண்பாட்டு கலைகளான வில்லுப்பாட்டு,கரகாட்டம்,ஒயிலாட்டம்,உறுமி மேளம், போன்ற கலைகள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதற்காக(மட்டும்)!!!

ஒரு நிமிடக் கதை



சூரியன் சுட்டெரிக்கும் மதிய வேளையில் தன் நான்கு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான் ரவி,வண்டியில் குளிரூட்டும் வசதி இருந்ததால் வெயிலின் கொடுமையை அவன் அறிந்திருக்கவில்லை.மேலும் தன் மனதில் ஒரு பெரிய காரியத்தை (கடமையை)முடித்த உணர்வுடன் இளையராஜாவின் இசையை ரசித்தவாறு சென்று கொண்டிருந்தான்.மேம்பாலத்தை அடுத்து வந்த சிக்னலில் சிகப்பு விளக்கு ஒளிரவே தன் வண்டியை நிறுத்தினான்.சிக்னலில் வயதான மூதாட்டி ஒருத்தி நிற்கும் வாகனத்தில் உள்ளவர்களிடம் யாசகம் பெற்றுக் கொண்டே வந்தாள்..தன் வண்டியின் அருகில் அவள் வந்ததும் வாகன கண்ணாடியை கீழிறக்கி தன் பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டு ஓன்று எடுத்து நீட்டினான்..அதை வாங்கிக் கொண்ட மூதாட்டி" நல்லாருக்கணும் தம்பி உங்களை மாதிரி நல்ல புள்ளைய பெத்திருந்தா வயசான காலத்துல தனியா இப்படி கஷ்டபடுற நிலைமை வந்திருக்காது உன்னை பெத்தவங்க ரொம்ப புண்ணியம் பண்ணிருக்காங்க தம்பி" என்று வாழ்த்தியவாறு நகர்ந்தாள். மூதாட்டி கூறிய வார்த்தைகள் கூறிய ஈட்டியினை கொண்டு நெற்றிப் பொட்டில் அறைந்தார்போலாயிற்று.உடனே தன் தாயைக் கொண்டு விட்டுவந்த முதியோர் இல்லம் நோக்கி தன் வாகனத்தை திருப்பினான்.இப்பொழுது சூரியனின் உஷ்ணம் வெளியில் இருப்பதை விட வண்டியினுள் அதிகமாய் நிரம்பி வழிந்திருந்தது..வாகனத்தில் "அம்மா என்றழைக்காத உயிரில்லையே" என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது..